சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2026-ல் வெளியான ‘அனந்தா’, புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் மகிமையையும், அவரது பக்தர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புத அனுபவங்களையும் மையமாகக் கொண்டு உருவான ஆன்மிகத் திரைப்படம். ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள இப்படம், பக்தி மற்றும் தெய்வீக நம்பிக்கையை முன்னிறுத்தும் குறுங்கதைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.
‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ போன்ற வணிக ரீதியான ஆக்ஷன் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, இந்தப் படத்தின் மூலம் முற்றிலும் வேறுபட்ட ஆன்மிகப் பாதையில் பயணித்துள்ளார். சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உருவான இப்படம், பக்தர்களுக்கு உணர்ச்சிகரமான அனுபவத்தை அளிக்கிறது.
புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா மருத்துவமனையில் தொடங்கும் கதை, பகவானின் இறுதி அழைப்பை முன்னிட்டு ஐந்து பக்தர்களை ஒன்றிணைக்கிறது. மும்பை தொழிலதிபர், பாலக்காட்டைச் சேர்ந்த முதியவர், காசியில் வசிக்கும் தாய், சென்னையைச் சேர்ந்த நடனக் கலைஞர் மற்றும் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டு தம்பதி என வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும் இந்தக் கதாபாத்திரங்கள், தங்கள் வாழ்க்கையில் சாய்பாபா நிகழ்த்திய தெய்வீகத் தலையீடுகளை அனுபவக் கதைகளாக பகிர்கிறார்கள். இக்குறுங்கதைகள், பக்தியின் வலிமையையும் நம்பிக்கையின் ஆழத்தையும் எடுத்துரைக்கின்றன.
ஓய்.ஜி. மகேந்திரன் நடித்த பாலக்காட்டு முதியவரின் கதையில் அவரது நடிப்பு குறிப்பிடத்தக்கது. மனைவியை இழந்த சோகம், தனிமை, அதன்பின் ஏற்படும் மனமாற்றம் என உணர்வூட்டமாக நடித்துள்ளார். அவரது மனைவியாக நடித்த ஸ்ரீரஞ்சனி இயல்பான நடிப்பை வழங்குகிறார்.
சுஹாசினி, தாயின் தவிப்பையும் சரணாகதியையும் உணர்ச்சிகரமாக வெளிப்படுத்துகிறார். மேக்கப் மற்றும் நடிப்பு இரண்டிலும் அளவான அணுகுமுறை பாராட்டத்தக்கது.
ஜெகபதி பாபு, தொழிலதிபர் வேடத்தில் பொருத்தமாக இருந்தாலும், அவர் சொந்தக் குரலில் பேசியிருந்தால் பாத்திரத்திற்கு மேலும் வலு சேர்ந்திருக்கும். அபிராமி வெங்கடாசலம் நடனக் கலைஞராக சில உணர்ச்சிகரமான தருணங்களை நன்றாக கையாள்கிறார். புட்டபர்த்தி நிர்வாகியாக வரும் நிழல்கள் ரவி அமைதியான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார்.
தேவாவின் இசை, பாடல்களிலும் பின்னணி இசையிலும் பக்தி மணத்தை பரப்புகிறது. சஞ்சய்யின் ஒளிப்பதிவு புட்டபர்த்தி, காசி போன்ற இடங்களை தத்ரூபமாக காட்சிப்படுத்துகிறது. படத்தொகுப்பு மென்மையாக இருந்தாலும், சில இடங்களில் நீளம் உணரப்படுகிறது. திரைக்கதை ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும், கதைகள் ஒன்றன்பின் ஒன்றாக விரியும் போது ஆர்வத்தை உருவாக்குகிறது.
மொத்தத்தில், ‘அனந்தா’, சத்ய சாய்பாபா பக்தர்களுக்கும், ஆன்மிகக் கதைகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் ஏற்ற படம். உணர்ச்சிகரமான தருணங்கள் பல இருந்தாலும், சில இடங்களில் போதனைத் தன்மை இயல்பை இழக்கச் செய்கிறது. இருந்தாலும், நம்பிக்கை மற்றும் தெய்வீக அனுபவத்தை மையமாகக் கொண்ட ஒரு பக்தி நாடகமாக படம் தன் இலக்கை அடைகிறது.

