நடிகராக விஜய்யின் கடைசி திரைப்படமாக ஜன நாயகன் உருவாகியுள்ளது.
தெலுங்குப் படத்தின் ரீமேக் எனப் பரவலாகக் கூறப்பட்டு வரும் இந்தப் படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்துக்கு தொடக்கத்தில் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்படுவதாகக் கூறி, பின்னர் அந்தப் படத்தில் மத ரீதியான காட்சிகள் நீக்கப்பட வேண்டுமென தணிக்கை வாரிய உறுப்பினர் ஒருவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
இதனால், தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க, தனி நீதிபதி ஆதரவாக தீர்ப்பு வழங்கினார். தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்து, வழக்கை வரும் 21ஆம் தேதிக்கு தலைமை நீதிபதி அமர்வு மாற்றியுள்ளது.
பா.ரஞ்சித் கண்டனம்
ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது.
அதே போல, ‘பராசக்தி’ திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே, என் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கும், நீலம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கும் கொடுக்கப்பட்டதை பலமுறை பகிர்ந்திருக்கிறேன். ஆனால், ஜனநாயகன் படத்திற்கு நிகழ்ந்திருப்பதென்பது, தணிக்கைத்துறை தவறான வழிகாட்டுதலுக்குள் சிக்கியிருப்பதைக் காட்டுகிறது.
மேலும், மாற்றுக்குரல்கள் வராமல் தடுப்பதற்கான வேலையை மிகத்தீவிரமாகக் கடைபிடிக்கின்ற இது போன்ற மோசமான போக்கை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். படைப்புச் சுதந்திரம் பாதுகாக்கவும், வரும் காலங்களில் மத்திய தணிக்கைத்துறை சுதந்திரமாக செயல்படவும் குரலெழுப்புவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

