‘மார்கழியில் மக்களிசை’ சீஸன் – 6: இருவருக்கு ‘மக்களிசை மாமணி’ விருது அறிவிப்பு

Priya
128 Views
1 Min Read

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட இசை நிகழ்ச்சியான ‘மார்கழியில் மக்களிசை’, 6-வது ஆண்டாக வருகிற டிசம்பர் 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில், சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நிகழ்கிறது.

4 மாவட்டங்கள், 3 மாநிலங்கள் என இதுவரை 12 அரங்குகள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி அரங்கேறியிருக்கிறது.

நாட்டுப்புற இசை, கானா, ஒப்பாரி, பழங்குடி இசை, ராப், ஹிப் ஹாப் என ஆறு இசை வகைமையின் கீழ், நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் இதில் பங்கெடுத்துள்ளனர். மூவாயிரத்திற்கும் அதிகமான தனியிசைக் கலைஞர்கள் இசைத்துள்ளனர். தமிழ்நாட்டின் 35 இசைக்குழுக்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்த 8 இசைக்குழுக்களையும் சேர்த்து இதுவரை 43 இசைக்குழுக்கள் பங்கெடுத்துள்ளன.

இம்மண்ணில் கொண்டாடத் தவறிய இசையை மேடையேற்றுவதோடு, மூத்த இசைக்கலைஞர்களின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘மக்களிசை மாமணி’ என்ற விருதையும் நீலம் பண்பாட்டு மையம் வழங்கி வருகிறது. இதுவரை 19 மக்களிசைக் கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில், ராஜா ராணி ஆட்டக்கலை கலைஞரும், ஒப்பாரிப் பாடகருமான தருமாம்மாள், நாதஸ்வரக் கலைஞர் எஸ்.மூர்த்தி ஆகிய இருவருக்கும் ‘மக்களிசை மாமணி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருட ‘மார்கழி மக்களிசை’ நிகழ்ச்சியில், 550 தனியிசைக் கலைஞர்கள், 20 இசைக்குழுக்கள், 6 மொழியைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் பங்குபெறுகின்றனர். அரசியல் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இருப்பதாக இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply