கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்டத்தில் நிகழ்ந்த துயர நெரிசல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 41 பேர் உயிரிழந்த இந்தச் சம்பவம், அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளில் ஏற்படும் நெரிசல் குறித்தான விவாதங்களை மீண்டும் கிளப்பியுள்ளது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு, தலைவர் விஜய் ஆறுதல் கூறியுள்ள போதிலும், இந்த நெரிசல் சம்பவம் குறித்த விமர்சனங்கள் தொடர்கின்றன. இந்தச் சூழலில், நடிகர் அஜித் குமார் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நெரிசல் சம்பவம் குறித்துப் பேசியுள்ள கருத்துகள், பலரின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
கரூர் கூட்ட நெரிசலின் பின்னணியும், சிபிஐ விசாரணையும்
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் பரப்புரைக் கூட்டம் கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று மாலை நடைபெற்றது. கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தைக் காண, லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். கூட்டம் துவங்குவதற்கு முன்பாகவே, கட்டுக்கடங்காத அளவுக்கு மக்கள் குவிந்ததால், ஏற்பட்ட கடும் நெரிசல் காரணமாக குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழக வரலாற்றில் மிக மோசமான பொது நிகழ்வு நெரிசல் விபத்துகளில் ஒன்றாகப் பதிவானது.
இந்தத் துயரச் சம்பவத்துக்குக் காரணம் யார் என்பதில் தவெக தரப்புக்கும், காவல்துறை தரப்புக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் ஏற்பட்டது. காவல்துறை முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்றும், தவெகவின் அறிவுறுத்தலின்படியே செயல்பட்டோம் என்றும் ஒரு தரப்பு குற்றம்சாட்ட, மறுபுறம் நடிகர் விஜய் தாமதமாக வந்ததும், ரசிகர்கள் மேடையை நோக்கி முண்டியடித்ததுமே நெரிசலுக்குக் காரணம் என காவல்துறை தரப்பு வாதிட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கட்சி சார்பாக ரூ. 20 லட்சம் இழப்பீடும், ஆறுதலும் வழங்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல்: “தனி நபரை மட்டும் குறை கூறுவது சரியல்ல” – அஜித் குமார்
கரூர் நெரிசல் சம்பவம் குறித்து நடிகர் அஜித் குமார், ஒரு தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டி பல முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. “கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு அந்தத் தனி நபரை மட்டுமே காரணமாகச் சொல்ல முடியாது. எல்லோரும் அதற்குப் பொறுப்பு,” என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், “கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்கு கூட்டமாகச் செல்கிறார்கள். அங்கு நெரிசல் ஏற்படுவதில்லை. ஏன் தியேட்டர்களிலும், சினிமா பிரபலங்களின் நிகழ்ச்சியிலும் நெரிசல் ஏற்படுகிறது?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
அவரது கூற்றுப்படி, “ஒரு பெரிய கூட்டத்தை கூட்டி நாம் யார் என்பதை காட்டக்கூடிய சமுதாயமாக மாறிவிட்டோம். இது முடிவுக்கு வர வேண்டும். அதனால் என்ன ஏற்படுகிறது என்றால், ஒட்டுமொத்த திரைத்துறையும் மோசமாகச் சித்தரிக்கப்படுகிறது. நாங்கள் அதை விரும்பவில்லை. ரசிகர்களின் அன்பை விரும்புகிறோம். அதற்காகத்தான் கடினமாக உழைக்கிறோம். ரசிகர்கள் அன்பை வெளிப்படுத்த பல வழிகள் உள்ளன.” என அவர் தெரிவித்துள்ளார்.

