சென்னை : அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் ரூ.3,250 கோடி முதலீட்டில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில், அடுத்த தலைமுறை வாகன இன்ஜின் (Next-Gen Engine) உற்பத்தியைத் தொடங்க உள்ளது. இதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் தலைமை செயலகத்தில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,
” முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது ஃபோர்டு நிறுவனம்!
ஃபோர்டு நிறுவனம் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இஞ்சின் உற்பத்தி அலகைத் தனது மறைமலை நகர் தொழிற்சாலையில் அமைக்கவுள்ளது. மிக நீண்ட, நம்பிக்கை கொண்ட உறவினைப் புதுப்பிக்கும் வகையில் இந்த ஆற்றல்மிகு மீள்வருகை அமைந்துள்ளது. இந்த முக்கிய முதலீட்டினால் 600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் உதிரி பாகச் சூழலும் வலுவடையும்.
அடுத்த தலைமுறை இஞ்சின்களை உற்பத்தி செய்ய இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரத்தைத் தேர்வு செய்துள்ள ஃபோர்டின் முடிவானது, தமிழ்நாட்டின் தொழில்துறை வலிமைக்கும் உலக உற்பத்திச் சங்கிலியில் நமது தவிர்க்க முடியாத இடத்துக்கும் மற்றுமொரு சான்றாக உள்ளது!
தங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்!” என தெரிவித்துள்ளார்.

