சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவர். திருமாவளவன் சந்தித்து பேசினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தெருக்களில் சாதிப்பெயரை நீக்கும் அரசாணை வெளியிட்டதற்கு முதல்வருக்கு நன்றி கூறினோம்.இனி வரும் காலங்களில் எந்த பெயரும் சாதி அடையாளத்தோடு இருக்க கூடாது என்பது தான் விசிகவின் கொள்கை முடிவு. கடந்த காலங்களில் சாதி அடிப்படையில் சில தலைவர்களின் பெயர்கள் புழக்கத்திற்கு வந்து அவை நிலைப்பெற்றுவிட்டன. அப்படி நிலைபெற்றுவிட்டதனால் அவர்கள் சாதி பார்த்தார்கள் என்று சொல்ல முடியாது. சாதி ஒழிப்பு அரசியல் வலுப்பதற்கு முன்பு இருந்த காலங்களில் தலைவர்களின் பெயர்கள் சாதி அடையாளத்தோடு அழைக்கப்பட்டன என்பதனால், அந்த அடையாளங்களை நாம் இப்போதைக்கு அழித்து அவர்களை அடையாளப்படுத்தாமல் விட்டுவிட கூடாது. அவர்கள் எந்த அடையாளத்தோடு அறியப்பட்டார்களோ, அந்த அடையாளத்தை இன்று கொண்டு வருகிறோம். இனிமேல் நாம் அதை பயன்படுத்த கூடாது.
பெரியாரே தொடக்க காலங்களில் நாயக்கர் என்றுதான் அறியப்பட்டார் ஆனால், அவர் வாழும் காலத்திலேயே அந்த சாதி பெயரை உதறி எறிந்துவிட்டார்.பின்னர் பெரியார் என்று அறியப்பட்டுவிட்டார்.எனவே தொடக்கத்தில் ராமசாமி நாயக்கர் என்று அறியப்பட்டதினால், அதையே பயன்படுத்த வேண்டும் என்று யாரும் வற்புறுத்தவில்லை அது தேவைப்படவும் இல்லை. திருவிக வை கூட அப்போது முதலியார் என்று தான் அழைத்தார்கள் காலப்போக்கில் அவரே அந்த பெயரை ஏற்கவில்லை.திருவிக என்று தான் இன்று அறிகிறோம்.அதை நாம் அரசியல் ஆக்கவேண்டாம் என்று நான் கருதுகிறேன். ஜிடி என்று மட்டும் பெயர் வைத்து புதிய தலைமுறையிடம் அவரை கொண்டு போய் சேர்த்தால் மகிழ்ச்சி அல்லது ஜிடி நாயுடு என்ற பெயரில் தான் அவரை அடையாளப்படுத்த முடியும் என்று ஒரு முடிவை அரசு எடுத்திருப்பதனால் அது சாதியை வளர்ப்பதற்கானதாக இருக்காது என்று நம்புவோம்.இன்னும் சில சாதி பெயர்களில் உள்ள “ன் ” விகுதியை மாற்றி “ர் ” விகுதியாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் .பின்னர் சாதி பெயர்களை நீக்கும் அரசாணையை வெளியிட்டதற்காக முதல்வரிடம் நன்றி கூறினோம் என தெரிவித்தார்.