சிங்கப்பூரில் மர்மமான மரணம்: அசாம் முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை
அசாமின் பெருமைமிகு பாடகரும், இசைக்கலைஞருமான ஜூபின் கார்க் சிங்கப்பூரில் மரணமடைந்த விவகாரம், மாநிலத்தில் பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நீச்சல் குள விபத்து என்று கூறப்பட்டபோதும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கு தற்போது சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. ஜூபின் கார்க்கின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியவும், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அசாம் மாநில அரசு தற்போது சிங்கப்பூர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பை நாட முடிவு செய்துள்ளது.
அசாம் அரசின் சட்ட உதவிக் கோரிக்கை
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இந்த வழக்கில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர உறுதியாக உள்ளார். இதன் ஒரு பகுதியாக, அவர் மத்திய அரசின் மூலம் சிங்கப்பூருடனான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை (MLAT) பயன்படுத்தக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டால், சிங்கப்பூரில் நடந்த சம்பவங்கள் தொடர்பான வழக்கு விவரங்கள், ஆவணங்கள், காணொளிகள் மற்றும் முக்கிய ஆதாரங்களை அசாம் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் (SIT) நேரடியாக அணுக முடியும். இது, இந்த மரணத்தின் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
யார் மீது வழக்கு? விசாரணை வளையத்தில் யார்?
ஜூபின் கார்க்கின் மரணம் தொடர்பாக, வடகிழக்கு இந்தியா விழாவின் ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா மற்றும் ஜூபின் கார்க்கின் மேலாளர் சித்தார்த் சர்மா ஆகியோர் மீது கிரிமினல் சதி, கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் தொடர்ச்சியான புகார்களின் அடிப்படையில் 55க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்ட நிலையில், CID இவை அனைத்தையும் ஒரே வழக்காகப் பதிவு செய்துள்ளது.
தற்போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள இவ்விருவருக்கும் எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 6ஆம் தேதிக்குள் கவுகாத்தியில் உள்ள CID அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அசாம் முதல்வர், இவர்கள் இருவரும் சரணடையத் தவறினால், சட்டப்படி அடுத்த கட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இதற்கிடையே, ஜூபினின் நண்பரும், சக இசைக்கலைஞருமான சேகர் ஜோதி கோஸ்வாமி கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார்.
அசாமின் இதயத்துடிப்பு ஜூபின் கார்க்
ஜூபின் கார்க் அசாம் மக்களுக்கு வெறும் பாடகர் மட்டுமல்ல; அவர் அசாமின் கலாச்சார அடையாளம். 1990களிலேயே தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய அவர், பாரம்பரிய அசாமிய நாட்டுப்புற இசையுடன் நவீன பாப் மற்றும் ராக் இசையை இணைத்து, அஸாமிய இசைக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்தார். அனாமிகா எனும் ஆல்பம் அவரை ‘அசாமின் இதயத்துடிப்பு’ ஆக்கியது. அஸாமி மட்டுமின்றி, வங்கம், இந்தி, தமிழ் உட்பட 40க்கும் மேற்பட்ட மொழிகளில் 32,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். அவரது நேரடி இசை நிகழ்ச்சிகள் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்தன.
சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தபோது, ஒரு நீச்சல் குள விபத்தில் அவர் உயிரிழந்ததாக ஆரம்பத்தில் தகவல் வெளியானது. சிங்கப்பூரிலேயே அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்ட போதும், பொதுமக்கள் மத்தியில் எழுந்த சந்தேகங்களைத் தொடர்ந்து, அசாமில் அவரது உடல் இரண்டாவது முறையாக உடற்கூராய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மரணத்துக்கு நீதி கேட்டு லட்சக்கணக்கான ரசிகர்கள் போராடி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், முதல்வரின் உறுதியான தலையீடும், SIT அமைப்பும், சிங்கப்பூரின் உதவியை நாடியிருப்பதும், இந்த வழக்கில் விரைவில் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.