ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில், கடந்த செப்டம்பர் 14-ம் தேதி பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் துபாயில் மோதின. இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 127 ரன்கள் என்ற இலக்கை, இந்திய அணி வெகு விரைவாகவே எட்டிப்பிடித்து வெற்றி வாகை சூடியது. எனினும், இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு கை குலுக்காதது, இரு நாடுகளுக்கும் இடையே பெரிய விவாதப்பொருளாக மாறியது.
வழக்கமாக, போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்கி, ஒருவரையொருவர் பாராட்டுவார்கள். ஆனால், பாகிஸ்தான் வீரர்களின் இந்த எதிர்பார்ப்பை முறியடித்து, இந்திய வீரர்கள் யாரும் மைதானத்தில் காணப்படவில்லை. டிரஸ்ஸிங் ரூம் கதவை மூடி, வெளியே வர மறுத்த இந்திய வீரர்களின் செயல், பாகிஸ்தான் வீரர்களை அதிருப்தியடையச் செய்தது. பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன், இந்திய அணியின் இந்தச் செயலை வெளிப்படையாகவே விமர்சித்தார். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ளாததும், இந்த விவகாரத்தை மேலும் சூடாக்கியது.
பஹல்காம் தாக்குதல்; சூர்யகுமாரின் பளீச் பதில்!
இந்தியா – பாகிஸ்தான் மோதல் குறித்து, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் குறிப்பிட்டுப் பேசியது, இந்த விவகாரத்திற்கு ஒரு புதிய கோணத்தைக் கொடுத்தது. “எங்கள் அரசும், பிசிசிஐயும் இந்த விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருந்தன. நாங்கள் இங்கு விளையாட மட்டுமே வந்தோம், அதற்கான சரியான பதிலடியைக் களத்தில் கொடுத்துள்ளோம். விளையாட்டு உணர்வையும் தாண்டிய சில விஷயங்கள் வாழ்க்கையில் உள்ளன என்று நான் நினைக்கிறேன். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம். இந்த வெற்றியை ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடத்திய நமது துணிச்சல் மிக்க ராணுவ வீரர்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்” எனப் பேசினார்.
சூர்யகுமார் யாதவின் இந்த அறிக்கை, பாகிஸ்தான் வீரர்களுக்கு கை குலுக்காததற்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்தியது. விளையாட்டு வீரராக இருந்தபோதும், ஒரு இந்தியக் குடிமகனாக தேசப்பற்றை வெளிப்படுத்திய சூர்யகுமாரின் செயல், பரவலான பாராட்டுகளைப் பெற்றது. பிசிசிஐ மற்றும் இந்திய அரசுடன் இணைந்து, பாகிஸ்தானுக்குக் கடுமையான செய்தியை அனுப்ப இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொண்டது தெளிவாகத் தெரிந்தது.
கங்குலியின் ஆதரவு!
இந்திய அணியின் இந்த முடிவுக்கு, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் ஆதரவு தெரிவித்துள்ளார். என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், “இது இந்திய அணியின் கேப்டனின் முடிவு. அவர் எடுத்த எந்த முடிவையும் அவர் எடுத்துள்ளார்” என்று சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவாகப் பேசினார். மேலும், இந்திய அணியின் பலம் குறித்து பேசிய அவர், “இந்திய அணி மிகவும் வலுவான அணி. ஆனால், டி20 போட்டியை பொறுத்தவரை, அன்றைய தினத்தில் சிறப்பாக செயல்படும் அணிக்கே வெற்றி கிடைக்கும். எனினும், இந்திய அணி காகிதத்தில் வலுவாகவே உள்ளது” என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.
சூர்யகுமார் யாதவின் இந்த செயல், விளையாட்டுக்கும் அரசியல் நிலைப்பாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்த ஒரு விவாதத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கும் தேசத்தின் பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கும் இடையிலான தொடர்பை அவரது வார்த்தைகள் எடுத்துக்காட்டுகின்றன.