நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கான தடையை நீக்கக் கோரி வெடித்த போராட்டங்கள், இளைஞர்களின் எழுச்சியாக உருவெடுத்து, ஆட்சியையே கவிழ்த்திருக்கின்றன. கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்கள், வன்முறை, உயிரிழப்புகள் என உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஒட்டுமொத்த அரசியல் மாற்றத்திற்கும் காரணம் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை என கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்த அரசாங்கம்
நேபாள அரசாங்கம், சமூக ஊடகத் தளங்கள் தங்கள் நாட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியது. இதற்குப் பெரும்பாலான நிறுவனங்கள் இணங்காததால், உரிமம் பெறாத தளங்களைத் தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஏழு நாட்கள் கெடு விதித்து, பதிவுக்கு வலியுறுத்தியது அரசு. இதில், ஒரு சில தளங்களைத் தவிர, மற்றவை பதிவு செய்யாததால், அவற்றுக்கு அரசு தடை விதித்தது.
இந்தத் தடையானது, இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் முக்கிய கருவியாக இருந்ததால், தடையை நீக்கக் கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் காத்மாண்டுவில் தொடங்கிய இந்தப் போராட்டம், தீவிரமடைந்து நாடெங்கும் பரவியது.
வன்முறை, உயிரிழப்புகள் மற்றும் அரசியல் மாற்றங்கள்
போராட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், சுமார் 20 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போராட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால், உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வன்முறை தீவிரமடைந்த நிலையில், தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரித்வி சுப்பா குருங், சமூக ஊடகங்களுக்கான தடையை நீக்கினார். எனினும், மக்களின் கோபம் அடங்கவில்லை. இந்த அரசியல் குழப்பங்கள் உச்சம் பெற்றபோது, பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் அதிபர் ராம் சந்திர பவுடல் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், நேபாளத்தின் ஆட்சி நிர்வாகம் ராணுவத்தின் கைகளுக்குச் சென்றது.
ராணுவத் தளபதியின் வேண்டுகோள்
ராணுவத் தளபதி அசோக் ராஜ் சிக்டேல், அமைதியை நிலைநாட்டுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம் என்று அவர் கூறினார். ஆனால், காத்மாண்டு மேயர் பாலேந்திர ஷா, நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்தப் போராட்டங்கள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகளின் வீடுகளையும் விட்டுவைக்கவில்லை. முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் மனைவி ரபி லட்சுமி சித்ரகர், போராட்டக்காரர்களால் வீட்டிற்குள் அடைத்து எரிக்கப்பட்டு உயிரிழந்தது இந்த வன்முறையின் கொடூர முகத்தைக் காட்டுகிறது.
சிறை உடைப்பு மற்றும் பயண எச்சரிக்கைகள்
போராட்டங்கள் சிறை உடைப்புகளுக்கும் வழிவகுத்தன. போக்ராவிலும், காத்மாண்டுவிலும் உள்ள சிறைகளில் இருந்து நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பி ஓடினர். குறிப்பாக, முன்னாள் உள்துறை அமைச்சர் ரவி லாமிச்சானேவும் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த அசாதாரண சூழல் காரணமாக, நேபாள விமான நிலையம் மூடப்பட்டது. இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்தியர்கள் நேபாளத்திற்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், நேபாள எல்லையில் இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
போராட்டங்களின் பின்னணி
சமூக வலைதளத் தடை ஒரு தூண்டுதலாக இருந்தாலும், இந்தப் போராட்டங்களின் ஆழமான காரணம் பொருளாதார நெருக்கடி மற்றும் வேலையின்மைதான் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியே இந்த எழுச்சிக்கு முக்கிய காரணம். நேபாளத்தில் வேலையின்மை விகிதம் 20.83% ஆக உயர்ந்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
அரசியல் தலைவர்களின் ஊழல் மற்றும் அவர்களின் வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கை குறித்த செய்திகள் சமூக ஊடகங்களில் பரவியதால், இளைஞர்களின் கோபம் மேலும் அதிகரித்தது. ‘Gen Z’ எனப்படும் இளைஞர்கள் அமைப்பு, இந்த போராட்டங்களை வழிநடத்தி வருகிறது.
அடுத்த பிரதமர் யார்?
தற்போது, காத்மாண்டு மேயராக உள்ள பாலேந்திர ஷா, அடுத்த பிரதமராகப் பதவியேற்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ’பாலேன்’ என்று பிரபலமாக அறியப்படும் இவர், ஒரு சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, ஊழல் மற்றும் அரசியல் ஸ்தாபனங்களுக்கு எதிராகப் பேசியதன் மூலம் இளைஞர்களின் ஆதரவைப் பெற்றவர். இவரது தலைமையின் கீழ், நேபாளத்தில் ஒரு புதிய அரசியல் சகாப்தம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், அண்டை நாடான வங்கதேசம் மற்றும் இலங்கையிலும் மக்கள் போராட்டங்கள் ஆட்சியைக் கவிழ்த்துள்ளன. சிரியாவில் அல் அசாத் ஆட்சியும் புரட்சி காரணமாக முடிவுக்கு வந்தது. இந்தப் பின்னணியில், நேபாளத்தின் இந்த அரசியல் மாற்றங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.