தமிழ் சினிமாவில் ‘ஜெயம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ‘தனி ஒருவன்’, ‘பேராண்மை’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ என பல வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகர் ரவி மோகன், தற்போது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், சினிமா உலகில் தனது அடுத்த கட்ட பயணத்தை தொடங்கியுள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
திரையுலக பிரபலங்கள் வாழ்த்து
’ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவில், நடிகர் கார்த்தி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, ஜெனிலியா, சிவராஜ் குமார் போன்ற பல பிரபலங்கள் கலந்துகொண்டு ரவி மோகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, ரவி மோகனின் தனிப்பட்ட குணங்களையும், திறமைகளையும் மனம் திறந்து பாராட்டினார்.
“யாருக்கும் கெடுதல் நினைக்காத ஆள் ரவி மோகன்”
கார்த்தி தனது பேச்சில், “ரவி மோகனிடம் எனக்குப் பிடித்த விஷயம், மனதளவில் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காத குணம். அவனால் அதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இன்று இந்த இடத்திற்கு அவன் வந்ததற்கு காரணம் அவனிடம் இருக்கும் பல திறமைகள். ஒரு முறை ஒரு படக் கதையை என்னிடம் விவரித்தான், அவன் சிரித்துக்கொண்டே இருப்பதைக் கண்டு அவனுக்குள் இப்படி ஒரு திறமை இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டேன்” எனப் பேசினார்.
மேலும், “அவன் அண்ணன் ராஜா கூட, அவனுடைய முழு திறமையையும் இன்னும் படத்தில் பயன்படுத்தவில்லை. யோகி பாபுவை வைத்து ஒரு இயக்குநராக அவன் திறமையை நாம் பார்ப்போம் என்று நினைக்கிறேன். சினிமா குறித்து அவனுக்கு நன்றாக தெரியும். எடிட்டிங்கும் அவனுக்குத் தெரியும், ஆனால் அதையெல்லாம் வெளிப்படையாக காட்டிக்கொள்ள மாட்டான்” எனப் புகழ்ந்து தள்ளினார் கார்த்தி.
கார்த்தியின் அன்பை வெளிப்படுத்திய ரவி மோகன்
கார்த்தியின் பாராட்டுகளுக்குப் பதிலளித்த ரவி மோகன், “என்னை வாழ்த்த வந்தவர்கள் வாழ்த்துங்கள். வாழ்த்த வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கும் சொல்கிறேன், நான் இங்கிருந்து விலக மாட்டேன். யார் என்ன நினைத்தாலும் என்மீது அக்கறை கொண்ட ஒரு நிஜ ‘வந்தியத்தேவன்’ கார்த்தி” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ரவி மோகனின் இந்தப் பேச்சு, திரையுலகில் அவர்களின் நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தியது.
ரவி மோகனின் அடுத்த நகர்வு
‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தில், இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கவுள்ளார். மேலும், இரண்டாவது படமாக யோகி பாபுவை வைத்து இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளதாக அவர் அறிவித்தார். இந்த புதிய பயணம், ரவி மோகனின் பன்முகத் திறமையை வெளிக்கொண்டு வரும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.