இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) குழந்தைகளின் ஆதார் அட்டைகளை புதுப்பிப்பது குறித்து பெற்றோர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்குப் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆதார் எண் வழங்கப்படுகிறது. இந்தக் குழந்தைகள் 5 வயதை அடைந்தவுடன், அவர்களின் கருவிழி மற்றும் கைரேகை பதிவுகளை ஆதார் அட்டையுடன் இணைப்பது அவசியம் என்று UIDAI வலியுறுத்தியுள்ளது.
இந்த வழிமுறை, குழந்தைகளின் தனிப்பட்ட அடையாளத்தை உறுதிப்படுத்தவும், ஆதார் தகவல்களைப் புதுப்பித்து பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவும். 5 முதல் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அருகிலுள்ள ஆதார் சேவை மையங்கள், தபால் நிலையங்கள் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களுக்கு அழைத்துச் சென்று இந்த புதுப்பித்தலை இலவசமாக மேற்கொள்ளலாம் என UIDAI தெரிவித்துள்ளது.
இருப்பினும், 7 வயதைக் கடந்த குழந்தைகளுக்கான ஆதார் புதுப்பித்தலுக்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் எண்ணுடன் கைரேகை மற்றும் கருவிழிப் பதிவுகள் இணைக்கப்படாவிட்டால், அந்த ஆதார் அட்டை செயலிழக்கப்படும் என்றும் UIDAI எச்சரித்துள்ளது.
இந்த புதுப்பித்தல் குறித்து, குழந்தைகளின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருவதாகவும் UIDAI தெரிவித்துள்ளது. பெற்றோர்கள் இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொண்டு, தங்கள் குழந்தைகளின் ஆதார் அட்டைகளைப் புதுப்பித்து, எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.