சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்ற ஆக்சியம்-4 திட்டத்தின் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா மற்றும் அவரது குழுவினர், ஜூலை 14 அன்று பூமிக்குத் திரும்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு, சுபன்ஷு சுக்லா, போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு மற்றும் அமெரிக்காவின் பெக்கி விட்சன் ஆகியோர் அடங்கிய ஆக்சியம்-4 குழு, கடந்த ஜூன் 25 அன்று சர்வதேச விண்வெளி மையத்திற்குப் புறப்பட்டுச் சென்றது.
இந்த விண்வெளிப் பயணத்தின் மூலம், குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். 15 நாட்கள் நீடித்த இந்த விண்வெளிப் பயணத்தில், ஆக்சியம்-4 குழுவினர் சுமார் 60 அறிவியல் பரிசோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டனர். இதில், குறிப்பாக சுபன்ஷு சுக்லா மனித செரிமான மண்டலம் விண்வெளியின் தனித்துவமான சூழலுக்கு எவ்வாறு தகவமைத்துக்கொள்கிறது என்பதை விளக்கும் ஒரு கல்வி வீடியோவை இளம் இந்திய மாணவர்களுக்காகப் படமாக்கினார். இது மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுபன்ஷு சுக்லா மற்றும் அவரது சக விண்வெளி வீரர்கள் ஜூலை 14 அன்று இந்திய நேரப்படி மாலை 4.35 மணிக்கு பூமிக்குத் திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்குத் திரும்பும் டிராகன் விண்கலம், சுமார் 17 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு கடலில் விழும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விண்வெளிப் பயணம், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. சுபன்ஷு சுக்லாவின் வருகைக்காக நாடு முழுவதும் ஆவலுடன் காத்திருக்கிறது.