பொறியியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற தொழில் முறை திறன்களுடன் ஜப்பானிய மொழியையும் சேர்த்து கற்றுக்கொண்டால், ஜப்பானில் மிகச் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற முடியும் என்று சென்னைக்கான ஜப்பான் துணைத் தூதர் தகாஹாஷி முனியோ தெரிவித்தார்.
இந்திய – ஜப்பான் தொழில் வர்த்தக சபை சார்பில், இரு நாடுகளின் கலாச்சாரம் குறித்து இளைஞர்களிடம் புரிதலை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் போட்டிகள் நடத்தப்பட்டன. பேச்சுப் போட்டியில் 67 பேர், கட்டுரைப் போட்டியில் 51 பேர் என 20 கல்லூரிகளைச் சேர்ந்த 110-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா இந்திய – ஜப்பான் தொழில் வர்த்தக சபை தலைவர் பத்மநாபன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. சென்னைக்கான ஜப்பான் துணைத் தூதர் தகாஹாஷி முனியோ, ‘இந்து’ என்.ரவி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
அவர்கள் பேசியதாவது: தகாஹாஷி முனியோ: மாணவர்கள் இரு நாடுகளின் எதிர்காலம் மட்டுமல்ல; இரு நாடுகளையும் இணைக்கப் போகும் சிறந்த பாலமும்கூட. ஜப்பானிய மொழி, கலாச்சாரத்தை கற்றுக்கொள்வது மாணவர்களுக்கு புதிய சிந்தனைகள், வாய்ப்புகளையும் வழங்கும்.
பொறியியல், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி துறை, சுகாதாரம், சுற்றுலா, வணிகம் ஆகிய துறைகளில் திறமையான இளைஞர்கள் ஜப்பானுக்கு அதிக அளவில் தேவைப்படுகின்றனர்.
தொழில் முறை திறன்களுடன் ஜப்பானிய மொழியையும் சேர்த்து கற்றுக்கொண்டால், ஜப்பானில் மிகச் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற முடியும்.
‘இந்து’ என்.ரவி: இந்தியா – ஜப்பான் இடையிலான உறவு கடந்த 10 ஆண்டுகளில் உலகளாவிய கூட்டாண்மை என்ற நிலையில் இருந்து சிறப்பு வாய்ந்த உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையாக தரம் உயர்ந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 2025-26-ம் ஆண்டில் 27.47 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இந்தியாவில் ஜப்பானின் நேரடி முதலீடு 48.17 பில்லியன் டாலர்களாக உள்ளது.
அடுத்த பத்தாண்டுகளில் மேலும் 68 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய ஜப்பான் திட்டமிட்டுள்ளது. அதேபோல, ஜப்பானிய முதலீட்டாளர்களின் விருப்பமான மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.
ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ், ரசாயனம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 590-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன.
சென்னை, ஸ்ரீபெரும்புதூர், கும்மிடிப்பூண்டி, ஓசூர் ஆகிய தொழில் வழித்தடங்களில் ஜப்பானிய நிறுவனங்கள் பெருமளவில் உள்ளன. ஜப்பானிய மொழி கற்கும் மாணவர்களுக்கு உலகளாவிய வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இவ்வாறு அவர்கள் பேசினர்.
இந்திய – ஜப்பான் தொழில் வர்த்தக சபை பொதுச் செயலாளர் சுகுணா, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி, கே.ஆர்.சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

