கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் 2026–27-ம் ஆண்டுக்கான கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையில் வெளியிட்ட அறிவிப்பின்படி விவசாயிகள், அதுசார்ந்த தொழில்களில் ஈடுபடும் சிறு, குறு விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் ரூ.5,000 கோடியில் ஊரகத் தொழில் கடன் ஆண்டுக்கு 9 சதவீத வட்டி விகிதத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். கடன் வழங்கிய நாளில் இருந்து, 36 மாதங்களுக்குள் வட்டியுடன் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும், தேவைக்கேற்ப 3 முதல் 6 மாதங்கள் வரை தவணைச் சலுகைக் காலம் வழங்கப்படும்.
இந்த நிதியாண்டில் இத்திட்டத்தின்கீழ், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.2,000 கோடியும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.3,000 கோடியும் என மொத்தம் ரூ.5,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் விளிம்புநிலை பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கவும், கடன் வசூல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் சிறு, குறு விவசாயிகள் தங்கள் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்த ஊரகத் தொழில் கடன் திட்டத்தின்கீழ் பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

