விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 100-ம் மேற்பட்டோரின் பதவிகளைப் பறித்து, பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வென்ற நிலையில், பொதுச் செயலாளர் பழனிசாமியின் உத்தரவை மீறி சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்து, ஆட்சியைத் தொடர வழிவகை செய்தனர்.
இந்நிலையில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 17 எம்எல்ஏக்களின் மாவட்டச் செயலாளர் பதவியை பறித்து, புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்தார். அதைத் தொடர்ந்து, தவெக அரசுக்கு ஆதரவளித்ததற்காக மன்னிப்பு கடிதம் கொடுத்து, கட்சித் தாவல் தடை சட்ட நடவடிக்கையில் இருந்து சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் தப்பினர்.
அதன் பிறகு, கட்சியில் மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி அளிக்க வேண்டும், தங்கள் ஆதரவாளர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் பொறுப்பு தவிர, அமைப்புச் செயலாளர் போன்ற பதவிகளை எம்எல்ஏக்களுக்கு பழனிசாமி அளித்தார். ஆனால் அந்த பதவிகள் எங்களுக்கு வேண்டாம் என சி.வி.சண்முகம் தரப்பினர் கடிதம் கொடுத்தனர்.
இதற்கிடையே நடந்து முடிந்த இடைத்தேர்தலில், அதிமுக வென்ற தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் தோற்ற நிலையில் சி.வி. சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தச் சூழலில் விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்டச் செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்ட பசுபதியுடன், சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்தனர்.
அதனால், 100-க்கும் மேற்பட்ட சி.வி.சண்முகம் ஆதரவாளர்களின் பட்டியலை வழங்கி, இவர்களின் கட்சிப் பதவிகளை பறிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அதை பரிசீலித்த பழனிசாமி, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோரின் பதவிகளைப் பறித்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நடவடிக்கை, விழுப்புரம் மண்டல அதிமுகவுக்குள் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. பழனிசாமியின் இந்த அதிரடி நடவடிக்கை, கட்சியில் தனக்கு எதிரான அதிருப்திக் குரல்களை ஒடுக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்த உறுதியேற்போம்
அதிமுகவின் 55-ம் ஆண்டு தொடக்கத்தையொட்டி தொண்டர்களுக்கு பழனிசாமி எழுதிய கடிதத்தில், ‘‘அதிமுகவை எத்தனையோ எதிரிகளும், துரோகிகளும் அழித்துவிடத் துடித்தபோதும், அவற்றை முறியடித்து கழகத்தை மீட்டெடுத்து, கம்பீரமாக வீறுநடை போடச் செய்திருக்கிறோம். கவர்ச்சி அரசியல் என்பது நீர்க்குமிழியைப் போன்றது.
அது எந்த நேரத்திலும் உடைந்து சிதறிவிடும். கவர்ச்சியால் மக்களை ஏமாற்றி, குதிரைபேர அரசியலின் துணையோடு தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கும் இன்றைய ஆட்சியாளர்கள், ஜனநாயகத்தின் மாண்புகளைப் படுகுழியில் தள்ளிவிட்டனர்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டுகிறது. தமிழகத்தின் உரிமைகள் காவு கொடுக்கப்படுகின்றன.
மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதைவிட நம் இயக்கத்தை எவ்வாறு விழுங்கலாம் என்பதிலேயே ஆட்சியாளர்கள் முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள்.
ஜனநாயக விரோத சக்திகளையும், மக்கள் விரோத ஆட்சியையும் ஜனநாயக வழியில் எதிர்கொண்டு வீழ்த்திட, ஒற்றுமையோடும், உறுதியோடும் களமிறங்கிட உறுதியேற்போம்’’ என்று கூறியுள்ளார்.

