தேனிக்கு மிக கனமழை எச்சரிக்கை: பொது மக்கள் ஆற்றங்கரைக்கு செல்ல தடை

Priya
719 Views
1 Min Read

“மிக கனமழை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் கரைப்பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம்,” என்று தேனி மாவட்ட ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று (அக்.15) தொடங்கியது. தொடர்ந்து இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் வானிலை ஆய்வு மையம் சார்பில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “மழை வலுப்பெற உள்ளதால் அனைத்து வட்டங்களிலும் உள்ள கண்மாய், குளங்கள் மற்றும் ஊருணிகளில் நீர் நிரம்ப வாய்ப்பு உள்ளது. ஆகவே வெள்ளப்பெருக்கின் போது அவசர கால பணியை மேற்கொாள்ள வேண்டும். கரைப்பகுதியில் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

முல்லை பெரியாறு, கொட்டக்குடி, வராக நதி மற்றும் வைகை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே குளிக்கவோ, ஆற்றங்கரையில் இறங்கவோ கூடாது. கால்நடைகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டாம். கடந்த கால மீட்புப் பணிகளின் அடிப்படையில் மாவட்டத்தில் 43 இடங்கள் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க 65 தங்கும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அவசரக் காலங்களில் அணைகள் திறக்கப்பட்டால் அது குறித்த தகவல்கள் உடனடியாக தெரிவிக்கப்படும். வெள்ளப்பாதிப்பு குறித்த புகார்களை தெரிவிக்க ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

1077 என்ற கட்டணமில்லா எண்ணிலோ (04546) 261 093 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.” இவ்வாறு ஆட்சியர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply