வரும் 19-ம் தேதி அன்று திமுக முப்பெரும் விழா அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 15-ம் தேதி நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்ததையொட்டி, தற்போது திமுக முப்பெரும் விழா வருகிற 19-ம் தேதி (சனிக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில், அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக முப்பெரும் விழா:
திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கமாகும். அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கிய நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பாண்டு திமுக முப்பெரும் விழா சென்னை அறிவாலயத்தில் கடந்த 15-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கட்சியில் சிறப்பாக செயலாற்றிய மூத்த முன்னோடிகளுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், 15-ம் தேதி நடைபெற இருந்த ‘முப்பெரும் விழா’ ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மாற்று தேதி அறிவிக்கப்பட்டு வரும் சனிக்கிழமை இந்த விழா நடைபெறுகிது.

