9 ஆண்டுகளுக்குப் பிறகு சென்சார் வாரியம் சீரமைப்பு: பிரீத்தி ஜிந்தா, பங்கஜ் திரிபாதி புதிய உறுப்பினர்களாக நியமனம்

Priya
773 Views
1 Min Read

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தை 9 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றியமைத்து, 18 புதிய உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நடிகர்கள் சுனில் ஷெட்டி, பிரீத்தி ஜிந்தா, பங்கஜ் திரிபாதி, புரோசேன்ஜித் சாட்டர்ஜி, இயக்குநர் பிரியதர்ஷன், இசைக்கலைஞர் ரிக்கி கேஜ் மற்றும் சின்னத்திரை நடிகை ரூபாலி கங்குலி உள்ளிட்ட 18 பேர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், முந்தைய தணிக்கைக் குழுவில் இடம்பெற்றிருந்த வாமன் கேந்த்ரே, ரமேஷ் படாங்கே உள்ளிட்ட சிலர் தொடர்ந்து நீடிக்கின்றனர்.

திரைப்படச் சட்டம் 1952-ன் படி, தணிக்கைக் குழுவின் தலைவரை தவிர்த்து 12 முதல் 25 உறுப்பினர்கள் வரை இடம்பெற வேண்டும். கடந்த மே மாதம் பிரசூன் ஜோஷி பிரசார் பாரதியின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சசி சேகர் வேம்படி தணிக்கைக் குழுவின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து தற்போது 18 புதிய உறுப்பினர்கள் 3 ஆண்டுகள் பதவிக் காலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு கடைசியாகக் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீரமைக்கப்பட்டது. அப்போதிருந்து செயல்பட்டு வந்த உறுப்பினர்களில் இருவர் காலமான நிலையிலும், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் இருந்து வந்தனர். தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு, முழுமையான அளவில் 18 உறுப்பினர்களைக் கொண்டு தணிக்கைக் குழுவை மத்திய அரசு மறுசீரமைப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply