தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்வதற்கான சம்பள உச்ச வரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
சமூகபாதுகாப்பு திட்டத்தின் கீழ் பிஎப் சலுகைகளைப் பெறுவதற்கான மாதாந்திர அடிப்படை சம்பள வரம்பு 2004 முதல் 2014 வரை ரூ.6,500 ஆக இருந்தது. இது 2014-ல் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இதன்படி, புதிதாக வேலைக்கு சேர்பவர்களின் அடிப்படை சம்பளம் ரூ.15,000 ஆக இருந்தால் மட்டுமே கட்டாய சமூக பாதுகாப்பு கிடைத்தது. அதற்கு மேல் சம்பளம் பெற்று புதிதாக சேர்பவர்களை நிறுவனங்கள் கட்டாயமாக பிஎப்-க்குள் சேர்க்க வேண்டியதில்லை.
அப்படியே சேர்க்கப்பட்டு அவர்களின் சம்பளம் ரூ.1 லட்சமாக இருந்தாலும், ரூ.15,000 வரம்பை பின்பற்றி ஊழியர் மற்றும் நிறுவனம் தலா ரூ.1,800 பங்களிப்பு செலுத்தினால் போதும். இந்த ஊதிய வரம்பை உயர்த்த வேண்டும் என தொழிலாளர் நல அமைப்புகள் கோரி வந்தன. அதன்படி பிஎப் தொகை பிடித்தம் செய்வதற்கான மாத சம்பள வரம்பை ரூ.25,000 ஆக உயர்த்தும் திட்டம் முன் வைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் வாயிலாக, ஊழியர்களின் மாதாந்திர பிஎப் பங்களிப்பு 3,000 ரூபாயாக அதிகரிக்கும். நிறுவனமும் அதே அளவு பங்களிப்பு செய்ய வேண்டியிருக்கும். பிஎப் சேமிப்பும், ஓய்வூதிய நிதிக்கான பங்களிப்பும் அதிகரித்து, நீண்டகால சமூக பாதுகாப்பு வலுப்பெறும்.
இதன் மூலம் 51 லட்சத்துக்கும் அதிகாமானோர் பயனடைவார்கள். குறிப்பாக, அவர்களுக்கு, பிஎப் சேமிப்பு, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் மூலமான ஓய்வூதிய பலன்கள், ஊழியர்களின் வைப்பு நிதி சார்ந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுப் பாதுகாப்பு ஆகியவை உரிய விதிகளின்படி தடையின்றி கிடைக்கும்.
சம்பள வரம்பு உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.11,339 கோடி கூடுதலாக செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது வழங்கப்பட்டு வரும் ஆண்டறிக்கை நிதி ஆதரவான ரூ.10,250 கோடியை விட அதிகமாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்திட்டத்துக்கு தோராயமாக ரூ.56,696 கோடி செலவிடப்படும்.

