2028 மகாமக விழாவில் 1 கோடி பேர் பங்கேற்க ஏற்பாடு: அமைச்சர் ரமேஷ் தகவல்

Priya
621 Views
1 Min Read

கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மகாமக அரங்கில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மாசி மகாமகம்-2028 தொடர்பாக அனைத்து அரசுத் துறை சார்பில் முன்னேற்பாடுகள் பணிகள் மேற்கொள்வது குறித்த முதற்கட்ட ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தலைமை வகித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 2028 மகாமக பெருவிழாவையொட்டி அறநிலையத் துறை மூலம் கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து, உயர் அதிகாரிகள் அளவிலான குழு அமைக்கப் பட்டு, கூட்டம் நடத்தப்பட்டு, முதல்வரின் உத்தரவின்படி பணிகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த மகாமக பெருவிழாவின்போது, 50 லட்சம் பேர் கலந்து கொண்டனர். 2028 மகாமக பெருவிழாவில் 1 கோடி பேர் வரை பங்கேற்பார்கள் எனவும், இதில், 50 லட்சம் பேர் ரயில் மூலம் வருவார்கள் எனவும் எதிர்பார்க்கிறோம். மகாமக விழாவுக்கு அனைத்து துறைகளையும் சேர்த்து, ரூ.600 கோடி செலவாகும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாமகம் தொடர்பான 17 கோயில்களில் திருப்பணிகள் நிறைவடைந்ததும், கும்பாபிஷேகம் நடைபெறும்.

மத்திய அரசிடம் இருந்து என்னென்ன உதவிகள் தேவைப்படும் என்பதை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, அவற்றைப் பெற நடவடிக்கை எடுப்போம். மகாமக பெருவிழாவை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என முதல்வர் விஜய் அறிவுறுத்தி உள்ளார். மகாமகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவடையும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply