தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் இரயில்வே உள்கட்டமைப்பு மிக வேகமான மறுமலர்ச்சியைப் பெற்று வரும் வேளையில், இந்திய இரயில்வேயின் 10 ஆண்டு காலப் பிரம்மாண்ட சாதனைகளை விளக்கிப் பிரதமர் நரேந்திர மோடி உரை ஆற்றியுள்ளார். குஜராத்தின் வடோதரா நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட அரசு விழாவில், சுமார் ரூ.30,400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு இரயில்வே வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ரூ.20,700 கோடிக்கும் அதிகமான செலவில் அமைக்கப்பட்ட 326 கிலோ மீட்டர் நீளமுள்ள சிறப்பு இரயில் சரக்குப் போக்குவரத்து வழித்தடத்தை (Dedicated Freight Corridor) பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், 329 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கிய ரூ.9,700 கோடி மதிப்பிலான மூன்று புதிய இரயில்வே திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் இரயில்வேயின் நவீனமயமாக்கல் குறித்துப் பேசிய பிரதமர், கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் பணி கலாச்சாரம் எவ்வாறு தலைகீழாக மாறியுள்ளது என்பதை அடுக்கடுக்கான சான்றுகளுடன் எடுத்துரைத்தார்.
விழா மேடையில் இந்திய இரயில்வே உற்பத்தித் துறையின் மாபெரும் சாதனையை வெளிப்படுத்திய பிரதமர் மோடி, “கடந்த 2014-ஆம் ஆண்டு நமது அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை இந்தியா சுமார் 50,000-க்கும் அதிகமான நவீன இரயில் பெட்டிகளைத் (Modern Railway Coaches) உள்நாட்டிலேயே வெற்றிகரமாகத் தயாரித்து வரலாறு படைத்துள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்கும் இரயில்வேத் துறை, இன்று உலகின் முன்னணி உற்பத்தி மையமாக உருவெடுத்துள்ளது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி முறையைக் கடுமையாக விமர்சித்த பிரதமர், “கடந்த காலங்களில் நாட்டை ஆண்ட முந்தைய அரசுகளால் 10 ஆண்டு கால ஆட்சியில் நாட்டில் 50,000 கழிப்பறைகளைக் கூடக் கட்ட முடியவில்லை. ஆனால், நமது அரசு குறுகிய காலத்தில் 50,000 நவீன இரயில் பெட்டிகளை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. முந்தைய ஆட்சியாளர்கள் பொய்களையே தங்களது மூலதனமாகக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்தார்கள். ஆனால், இன்றைய இந்தியாவின் இளைஞர்கள் உண்மையின் முழக்கத்தோடு இணைந்து நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறார்கள்” என்று காட்டமாகச் சாடினார்.
இந்தியாவில் சரக்கு இரயில்களின் வேகத்தையும் திறனையும் அதிகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக சரக்கு வழித்தடத் திட்டத்தின் (DFC) வரலாற்றுப் பின்னணியைப் பிரதமர் மோடி விளக்கினார். “இந்தச் சிறப்புச் சரக்கு வழித்தட யோசனை முதன்முதலில் 2004-ஆம் ஆண்டிலேயே கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் 2006-ல் இதற்கெனத் தனி சிறப்பு நிறுவனமும் உருவாக்கப்பட்டது. ஆனால், 2014-ஆம் ஆண்டு வரை இந்தத் திட்டத்தின் கோப்புகள் எந்தவித முன்னேற்றமும் இன்றி ஒரு மேஜையிலிருந்து மற்றொரு மேஜைக்குச் சுத்திக்கொண்டே இருந்தன” என்று சுட்டிக்காட்டினார்.
“2014-இல் உங்கள் ஆசியோடு டெல்லியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முடங்கிக் கிடந்த இத்திட்டப் பணிகளை நாங்கள் அதிவேகமாக முடுக்கிவிட்டோம். அதன் பலனாக, இன்று 2,800 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட பிரத்யேகச் சரக்கு வழித்தடப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. முந்தைய காலங்களில் பயணிகள் இரயில்களும் சரக்கு இரயில்களும் ஒரே தண்டவாளத்தைப் பகிர்ந்துகொண்டதால், இரண்டுமே கடுமையான காலதாமதத்தைச் சந்தித்தன. ஆனால், இன்று இந்த நிலைமை முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது” என்று மோடி பெருமிதத்துடன் கூறினார்.
தற்போது கிழக்கு மற்றும் மேற்கு சரக்கு வழித்தடங்களில் நாள்தோறும் 430-க்கும் மேற்பட்ட சரக்கு இரயில்கள் அதிவேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்குமுன்பு ஒரு சரக்கு இரயில் 100 கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பதற்குச் சராசரியாக 6 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை ஆனது. ஆனால் தற்போது தனி வழித்தடங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், அந்தப் பயண நேரம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கு மாபெரும் புத்துயிரளித்துள்ளது.
முந்தைய காலத்து இரயில்வே பட்ஜெட் நடைமுறைகளையும் தற்போதைய மாற்றங்களையும் ஒப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, “கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் இரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது, ஏதோ ஒன்று அல்லது இரண்டு புதிய இரயில்கள் அறிவிக்கப்படும். அதை வைத்துக்கொண்டு ஆண்டு முழுவதும் பெரிதாக விளம்பரம் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. நாடு முழுவதும் ஆண்டு முழுவதும் அடுத்தடுத்து புதிய அதிவேக இரயில்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன” என்றார்.
“இந்த நிதியாண்டில் இந்திய இரயில்வேக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2.9 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இது 12 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பட்ஜெட் ஒதுக்கீட்டை விடப் பல மடங்கு அதிகமாகும். இந்த மாபெரும் நிதி ஒதுக்கீடு நாட்டின் இரயில்வே உள்கட்டமைப்பைப் பன்னாட்டுத் தரத்திற்கு உயர்த்தப் பயன்பட்டு வருகிறது. பயணிகள் பாதுகாப்பு, நிலையங்களின் நவீனமயமாக்கல் மற்றும் அதிவேகப் போக்குவரத்து ஆகியவை ஒரே நேரத்தில் சாத்தியமாக்கப்பட்டுள்ளன” என்று மோடி விளக்கமளித்தார்.
தனது உரையின் நிறைவுப் பகுதியில், இந்தியாவின் எதிர்கால தொலைநோக்குப் பார்வை குறித்துப் பேசிய பிரதமர் மோடி, “இந்திய வரலாற்றில் தற்போதைய காலகட்டம் முன்னெப்போதும் இல்லாத ஒரு பொற்காலமாகும். நாட்டின் இளமை ஆற்றல் உச்சத்தில் இருக்கும் சகாப்தம் இது. இதுபோன்றதொரு சாதகமான காலகட்டம் இந்திய வரலாற்றில் மீண்டும் வராது. எனவே, நாம் ஒவ்வொருவரும் 2047-ஆம் ஆண்டிற்குள் ‘வளர்ந்த இந்தியா’ (Viksit Bharat) எனும் இலக்கை அடைவதற்கு முதன்மை முன்னுரிமை அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

