கிக் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு: அமைச்சர் பர்வேஸ் அறிவிப்பு

Priya
770 Views
2 Min Read

சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர் நலன், திறம்பாட்டுத் துறைமானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நவீன தொழில்நுட்பப் பயிற்சி வழங்க 5 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ரூ.76.46 கோடி செலவில் ‘கட்டுமானத் தொழில் திறன்மிகு மையங்கள்’ நிறுவப்படும்.

சிறந்த முறையில் பணிபுரியும் கட்டுமானத் தொழிலாளர்களை ஊக்குவிக்க, மாவட்ட, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு ஆண்டுதோறும் ‘முதல்வரின் கட்டுமான தொழிலாளர் வெற்றி விருதுகள்’ மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும்.

சென்னை, கோவையில் வேலைதேடி வரும் தொழிலாளர்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்கு ரூ.14 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளுடன் கூடிய தங்குமிடங்கள் அமைக்கப்படும்.

ஆயிரம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சர்வதேச தரத்திலான பயிற்சி அளித்து, வெளிநாடுகளில் வேலை பெற்றுத் தர ‘அயலகம் செல்லும் தமிழ்நாடு கட்டுமான வெற்றிக் கரங்கள்’ திட்டம் ரூ.15.06 கோடியில் செயல்படுத்தப்படும்.

50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தச்சு, மின்பணி, பிளம்பிங் உள்ளிட்ட துறைகளில் 7 நாள் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியின்போது நாள் ஒன்றுக்கு ரூ.800 ஊதிய இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும்.

இணையம் சார்ந்த ‘கிக்’ தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீடு வழங்கப்படும். ஆயிரம் கிக் தொழிலாளர்கள் இ-பைக் வாங்குவதற்காகப் பெறப்படும் கடன் வட்டித் தொகையை அரசே ஏற்கும்.

அமைப்புசாரா ஓட்டுநர்கள் 1000 பேருக்குப் புதிய எலெக்ட்ரிக் ஆட்டோ வாங்க 50 சதவீத மானியம் அதிகபட்சம் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். பயன்பாட்டில் உள்ள ஆட்டோவை சிஎன்ஜி-க்கு மாற்ற ஆயிரம் ஓட்டுநர்களுக்கு 50 சதவீத மானியம் அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.

டிஎன்பிஎஸ்சி மற்றும் ஆசிரியர் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான மெய்நிகர் கற்றல் வலைதள நிதி ஒதுக்கீடு ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.

ஐடிஐ மாணவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை உறுதிசெய்ய ரூ.7.33 கோடியில் ‘ஐடிஐ – வெளிநாட்டு வேலைவாய்ப்பு வெற்றி திட்டம்’ என்பன உள்ளிட்ட 15 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

நெஞ்சை நிமிர்த்தி பேச வேண்டும்…

சட்டப்பேரவையில் பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் நேற்று ஒரு கருத்தை வெளியிட்டார். ‘‘பேரவையில் உறுப்பினர்கள் பேசும்போது வளைந்து, நெளிந்து, குனிந்து மைக்கில் பேசும் நிலை உள்ளது.

உறுப்பினர்கள் நெஞ்சை நிமிர்த்திப் பேச வேண்டும். அதற்காக, பேரவை பணியாளர்கள், உரிய அளவீடுகளை எடுத்து மைக்கை அமைக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply