ரயில்களில் அனுமதியற்ற உணவு மற்றும் தண்ணீர் விற்பனைக்கு கடும் தடை; IRCTC அதிரடி நடவடிக்கை!

Priya
615 Views
2 Min Read

ரயில்களில் பயணிகளுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, IRCTC (இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்) அனுமதியற்ற உணவு மற்றும் பானங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, அனுமதியின்றி விற்கப்பட்ட சுமார் 8,000 தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. IRCTC-ன் விரைவு நடவடிக்கை குழு மற்றும் ரயில்வே வணிகத்துறை இணைந்து, ரயில்கள் மற்றும் நிலையங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தத் திடீர் சோதனைகளின் போது, அனுமதியற்ற தொகுக்கப்பட்ட குடிநீர், உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் மீது தீவிர கண்காணிப்பு செலுத்தப்பட்டு வருவதுடன், கேடரிங் ஸ்டால்களின் உரிமங்கள், தூய்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக, லக்னோ பகுதியில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடத்தப்பட்ட சிறப்பு இயக்கத்தில் 117 ரயில்கள் சோதிக்கப்பட்டு 5,241 தண்ணீர் பாட்டில்களும், சண்டிகர் மற்றும் அம்லா உள்ளிட்ட பல நிலையங்களில் 51 ரயில்கள் சோதிக்கப்பட்டு 3,108 அனுமதியற்ற குடிநீர் பாட்டில்களும், ஐஸ்கிரீம் மற்றும் சுவையூட்டப்பட்ட பால் வகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், சபர்மதி, ஹவுரா உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு, அனுமதியின்றி ஏற்றப்பட்ட குடிநீர், மோர் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. ரயில்களில் முறையான அனுமதியின்றி எந்தவொரு உணவு அல்லது குடிநீரையும் விற்பனை செய்யவோ, இருப்பு வைக்கவோ கூடாது என IRCTC கேடரிங் நடத்துநர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

விதிகளை மீறுவோர் மீது உரிம விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் பாதுகாப்பிற்காக இதுபோன்ற திடீர் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடெங்கும் உள்ள ரயில் நிலையங்களில் சுகாதாரமான குடிநீர் விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார். பழைய குடிநீர் டேங்குகளை அகற்றிவிட்டு புதிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவுவது உள்ளிட்ட உத்தரவுகளை அமைச்சர் பிறப்பித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply