குறுதானிய சாகுபடி பரப்பை இருமடங்காக்க ரூ.7 கோடியில் ‘தமிழ்நாடு குறுதானிய இயக்கம்’

Priya
765 Views
2 Min Read

குறுதானிய சாகுபடிப் பரப்பை இருமடங்காக்க ரூ.7 கோடி மதிப்பில் ‘தமிழ்நாடு குறுதானிய இயக்கம்’ செயல்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026-27-ம் நிதி ஆண்டுக்​கான வேளாண் பட்​ஜெட்டை தமிழக சட்​டப்​பேர​வை​யில் தாக்கல் செய்த வேளாண் அமைச்சர் வினோத், குறுதானியங்களின் சாகுபடிப் பரப்பை இருமடங்காக அதிகரிக்கும் நோக்கில், 2026-27 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் ‘தமிழ்நாடு குறுதானிய இயக்கம்’ செயல்படுத்தப்படும் என்றும், இதற்காக மாநில நிதியிலிருந்து 7 கோடியே 1 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அதிக சத்துக்களுடன் நிறைய மருத்துவ குணங்களையும் உள்ளடக்கிய சிறுதானிய உணவுப் பழக்கம் வீடுகளில் தொடங்கி உணவகங்கள் வரை பரவத் தொடங்கியுள்ளது. இவற்றின் தேவையைக் கருத்தில் கொண்டு, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கில் ‘தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2026 27 ஆம் ஆண்டில், உழவர் குழுக்கள் அமைத்தல், மாற்றுப்பயிர் சாகுபடித் தொகுப்பு மானியம், சிறுதளைகள் விநியோகம், வேளாண் இயந்திர வாடகை மையங்கள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள் போன்ற இனங்கள், 63 கோடியே 81 லட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் வாயிலாக, 11 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சிறுதானியப் பயிர் சாகுபடி செய்யும் 4 இலட்சத்து 75 ஆயிரம் விவசாயிகள் பயனடைவர்.

தமிழ்நாட்டில் வறட்சியைத் தாங்கக்கூடிய, குறைந்த நீர்த்தேவை கொண்ட, அதிக ஊட்டச்சத்து, நார்ச்சத்துடைய குறுதானியங்களான சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்றவை சராசரியாக 61 ஆயிரத்து 750 ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகின்றன.

Advertisement

இந்நிலையில், குறுதானியங்களின் சாகுபடிப் பரப்பை இருமடங்காக அதிகரிக்கும் நோக்கில், 2026-27 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் ‘தமிழ்நாடு குறுதானிய இயக்கம்’ செயல்படுத்தப்படம். இதற்காக, 7 கோடியே 1 லட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

புரதசத்து, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் ஆகியவை அதிகமாகவும், குளூட்டன், கிளைசிமிக் குறியீடு குறைவாகவும் உள்ள தானியப்பயிர்களான சீமைத் தினை, பாப்பரை மற்றும் குலசாமை ஆகிய பயிர்களைத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தும் நோக்கில், அவற்றைச் சாகுபடி செய்வதற்கு உகந்த தட்பவெப்ப நிலை கொண்ட நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம் முதலிய மாவட்டங்களில், 30 லட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில், செயல்விளக்கத் திடல்கள் அமைக்கப்படும். இவ்வாறு வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply