நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டரான ஜவோகிர் சிந்தரோவ் ஆகியோர் மோதும் ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் வரும் நவம்பர் 25 முதல் டிசம்பர் 15 வரை நடைபெறும் என ஃபிடே அறிவித்துள்ளது.
இந்தப் போட்டித் தொடங்கும் போது குகேஷ், ஜவோகிர் சிந்தரோவ் ஆகிய இருவருக்குமே 20 வயது மட்டுமே நிரம்பியிருக்கும். உலக சாம்பியன்ஷிப் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் மோதிக் கொள்ளும் போட்டியாளர்கள் என்ற பெருமையை பெற உள்ளனர். உலக சாம்பியன்ஷிப் போட்டித் தொடரானது 14 கிளாசிக்கல் சுற்றுகளாகக் நடத்தப்படும்.
இதில் முதலில் 7.5 புள்ளிகளைப் பெறும் வீரர் உலக சாம்பியனாக முடிசூட்டப்படுவார். 14 போட்டிகளும் நிறைவடையும் முன்பே இருவரில் யாரேனும் ஒருவர் வெற்றிக்குத் தேவையான புள்ளிகளை எட்டிவிட்டால், மீதமுள்ள போட்டிகள் நடத்தப்பட மாட்டாது.
இருப்பினும், கிளாசிக்கல் சுற்றுகளின் முடிவில் இரு வீரர்களும் 7-7 என்ற புள்ளிக் கணக்கில் சமநிலை பெற்றால், வெற்றியாளரைத் தீர்மானிக்கத் தொடர்ச்சியான டைபிரேக் போட்டிகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் இறுதி வெற்றியாளர் உறுதி செய்யப்படுவார்.

