மேகேதாட்டு அணையை எதிர்த்து பிலிகுண்டுலு முதல் பூம்புகார் வரை 3 நாள் நடைபயணம்: அன்புமணி அறிவிப்பு

Priya
63 Views
2 Min Read

கர்நாடக அரசு மேகேதாட்டு அணையை கட்டக் கூடாது என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பிலிகுண்டுலு முதல் பூம்புகார் வரை ஜூலையில் 3 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் மேகேதாட்டு அணை, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து அனைத்து உழவர் சங்கத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடை பெற்றது.

இதற்கு அன்புமணி தலைமை தாங்கினார். விவசாய சங்க தலைவர்கள் பி.ஆர்.பாண்டியன், காவிரி தனபாலன், வேட்டவலம் கே.மணிகண்டன், தெய்வசிகாமணி உள்பட 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ‘கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இரு மாநில உறவுகளை சிதைக்கும் வகையில் காவிரி குறுக்கே மேகேதாட்டு அணை கட்டத் துடிக்கும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு கண்டனம் தெரிவித்தும் முல்லை பெரியாறு அணை சிக்கல் தொடர்பாக பேச்சு நடத்துவதற்கான கர்நாடக அரசின் அழைப்பை ஏற்கக்கூடாது என்றும் நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது: விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடன் இணைந்து விரைவில் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளோம். கர்நாடக அரசு மேகேதாட்டு அணையை ஏன் கட்டக் கூடாது என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, ஜூலை முதல் வாரத்தில் 3 நாட்கள் தொடர் நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன்.

இந்த நடைபயணம் தருமபுரி மாவட்டம் பிலிகுண்டுலுவில் தொடங்கி, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் வரை நடைபெறும். இதன்மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காத சூழல் உருவாகும். கர்நாடகாவில் தேர்தல் வரவிருப்பதால், அம்மாநில அரசு இவ்விவகாரத்தை இன்னும் தீவிரமாக அரசியலாக்கும். மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும். ஆனால் தற்போது கர்நாடகாவுக்குச் சாதகமாகவே இருப்பதாகத் தெரிகிறது.

தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதிப்படி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். நீலகிரியில் தேயிலை விவசாயிகளின் வீடுகளை ஜப்தி செய்யும் நடவடிக்கைகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply