தவெக ஆட்சி கவிழ ஒருபோதும் விடமாட்டோம்.. திருமாவளவன் உறுதி!

Priya
178 Views
2 Min Read

அதிமுக இதுபோன்ற நெருக்கடிகளை சந்திக்கும் என தேர்தலுக்கு முன்பே நான் சுட்டிக்காட்டியிருந்தேன். ஒருவேளை பாஜகவுடன் சேராமல் இருந்திருந்தால் அதிமுகவுடன் சேர்ந்து தவெக ஆட்சியமைக்க முயன்றிருக்கும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

அதிமுகவில் இருந்த 4 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததை ஆரோக்கியமான அரசியலாக கருதவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.,க்களான மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். கையோடு தவெகவில் இணைந்தனர். இது தவெக அரசு அமைய ஆதரவு கொடுத்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் இடையே புகைச்சலை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்தார்.

இதில் பேசிய அவர் முதலில் பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடைபெற்ற திமுக – விசிக தொண்டர்கள் இடையேயான மோதல் பற்றிய கேள்விக்கு பதிலளித்தார். அதாவது, நடந்த சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது. விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து விட்டது. விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவதூறுகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை கேள்விப்பட்டு அதை தவிர்க்க வேண்டும் என நான் கேட்டுக்கொண்டேன். மாவட்ட முன்னணி பொறுப்பாளர்கள் தகவலறிந்து அதனை தவிர்த்த நிலையில், அதனை அறியாத தொண்டர்கள் அங்கு கூடினர். இனி இந்த மாதிரி விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கக்கூடாது என தெரிவித்தார்.

தொடர்ந்து அவரிடம், 4 அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் தவெகவில் இணைந்தது பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, விசிக இதனை ஆரோக்கியமான அரசியலாக கருதவில்லை. இந்த தவெக ஆட்சி அமைய வேண்டும் எனவும், குடியரசுத்தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது எனவும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து விசிக இந்த முடிவை எடுத்தது. எந்த சூழலிலும் தவெக ஆட்சி கவிழ்வதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் கொடுக்க மாட்டோம். அந்த நம்பிக்கையில் 5 ஆண்டுகள் ஆட்சியை திறம்பட தொடர வேண்டும். விமர்சனங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் தவெக தலைமை செயல்படக்கூடாது.

Share This Article
Leave a Comment

Leave a Reply