உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரை விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் இருந்து மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான சர்க்கரை (மூல சர்க்கரை, வெள்ளைச் சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை) ஏற்றுமதிக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மத்திய அரசு தடை விதித்துள்ளது. சர்க்கரை ஏற்றுமதி குறித்த இந்த அறிவிப்பு, சர்வதேச சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய சர்க்கரை உற்பத்தி நாடாக இந்தியா திகழ்கிறது. இந்நிலையில், மத்திய அரசின் இந்த சர்க்கரை ஏற்றுமதித் தடை, உள்நாட்டு விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. எனினும், சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள கோட்டா (Quota) அடிப்படையிலான சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்தத் தடை பொருந்தாது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இது தவிர, முன்னரே அனுமதி அளிக்கப்பட்ட மற்றும் ஏற்றுமதிப் பாதையில் உள்ள குறிப்பிட்ட சரக்குகளுக்கும் விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போதைய புவிசார் அரசியல் சூழல் மற்றும் பருவமழை முன்னறிவிப்புகள் காரணமாக, வரும் காலங்களில் சர்க்கரை உற்பத்தியில் தொய்வு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்தைத் தடுக்க அரசு முன்கூட்டியே இத்தகைய முடிவுகளை எடுத்து வருகிறது. சர்க்கரை விலை உயர்வு என்பது சாமானிய மக்களின் குடும்ப பட்ஜெட்டைப் பாதிக்கும் என்பதால், போதுமான இருப்பு இருப்பதை உறுதி செய்யவே அரசு இந்தத் தடையை விதித்துள்ளது.
அரசு வழங்கியுள்ள தெளிவுபடுத்தலின்படி, கீழ்க்கண்டவற்றுக்கு ஏற்றுமதித் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது:
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கான CXL மற்றும் TRQ ஒதுக்கீடு கொண்ட ஏற்றுமதிகள்.
அரசாங்கங்களுக்கு இடையிலான உணவுப் பாதுகாப்புத் தேவைகளுக்காக மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிகள்.
ஏற்றுமதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே கப்பல்களில் ஏற்றத் தொடங்கப்பட்ட அல்லது சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட சரக்குகள்.

