29 – சினிமா விமர்சனம்

Priya
11 Views
2 Min Read

காதல், லட்சியம், அடையாளத் தேடல் ஆகிய மூன்றையும் மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் தான் 29.

சேலத்தில் இருந்து சென்னைக்கு வரும் சத்யா (விது), தனது வாழ்க்கையில் பெரிய கனவோ, இலட்சியமோ இல்லாமல் காதலையே உலகமாகக் கொண்டிருப்பவர். அதே நேரத்தில், விஜி (ப்ரீத்தி அஸ்ராணி) ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற உறுதியான கனவுடன் வாழ்கிறார். இருவரும் காதலிக்க, அந்த இரு மனநிலைகளின் மோதலே படத்தின் மையம்.

மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமார், இந்த படத்தில் 2010களின் இளைஞர்களின் வாழ்க்கையையும், அக்கால சென்னைச் சூழலையும் மீண்டும் நினைவூட்ட முயற்சித்துள்ளார். காதல் காட்சிகளில் கவித்துவமும், சில உரையாடல்களில் வாழ்க்கை பற்றிய சிந்தனைகளும் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக, காதலுக்கும் தனிப்பட்ட அடையாளத்திற்கும் இடையிலான முரண்பாட்டை படம் பேச முயல்வது குறிப்பிடத்தக்கது.

நடிகர்களில் ப்ரீத்தி அஸ்ராணி படத்தின் பெரிய பலமாக திகழ்கிறார். காதல், கோபம், குடும்பப் பிரச்சனை, கிளைமாக்ஸ் என பல்வேறு உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். விது சில இடங்களில் நன்றாக நடித்திருந்தாலும், உணர்ச்சி மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் முழுமையாக தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் தடுமாறுகிறார். ரூம்மேட்டாக வரும் அவினாஷ் மற்றும் எதிர்மறை கதாபாத்திரத்தில் வரும் மகேந்திரனும் கதைக்கு துணை நிற்கிறார்கள்.

ஷான் ரோல்டனின் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு தேவையான உணர்வை கொடுக்கிறது. மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு அழகூட்டுகிறது.

ஆனால், காதல் கதையாக தொடங்கும் படம், இரண்டாம் பாதியில் சமூகப் பிரச்சனை, ஏரி பாதுகாப்பு, போராட்டம், போலீஸ் அராஜகம் போன்ற பல விஷயங்களை சேர்த்துக் கொள்ளும் போது சற்றே தடுமாறுகிறது. அந்த பகுதிகள் கதையுடன் முழுமையாக ஒன்றிப் போகவில்லை. மேலும், பழைய பாணி திரைக்கதை மற்றும் நீளமான வசனங்கள் சில இடங்களில் பொறுமையை சோதிக்கின்றன. இன்றைய தலைமுறை ரசிகர்களை விட, 80s மற்றும் 90s கிட்ஸ்களுக்கு இந்த படம் அதிகமாக connect ஆகும்.

மொத்தத்தில், இந்தப் படம் முழுமையாக கவரவில்லை என்றாலும், காதல் மற்றும் வாழ்க்கை குறித்த சில சிந்தனைகளை மனதில் விட்டுச் செல்லும் ஒரு முயற்சியாக பார்க்கலாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply