தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது கட்சித் தொண்டர்களுக்கு மிக முக்கியமான தேர்தல் கால விழிப்புணர்வு மடல் ஒன்றை எழுதியுள்ளார். “திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்டும் என்பதில் தமிழக மக்கள் உறுதியாக உள்ளனர். அவர்களின் நம்பிக்கையை வாக்குகளாக மாற்றி, ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு உடன்பிறப்புகளாகிய உங்கள் கையில் உள்ளது” என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தான் மேற்கொண்ட சூறாவளிப் பயணத்தை நினைவுகூர்ந்த முதல்வர் ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் போன்ற சாதனைகள் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். “பாஜக தலைமையிலான அடிமை அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பது தமிழகத்தின் உரிமைகளைப் பறிப்பதற்குச் சமம். இதனை மக்கள் உணர்ந்துள்ளனர். எதிரிகளின் சதித்திட்டங்களை முறியடித்து, திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியைத் தேடித்தர வேண்டிய அறுவடை நாள் இது” என அவர் விவரித்தார்.
வாக்குப்பதிவு நாளில் திமுகவினர் பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் முதல்வர் இந்த மடலில் பட்டியலிட்டுள்ளார். வாக்குச்சாவடி முகவர்கள் (Booth Agents) வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பே வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும் எனவும், மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll) நடைபெறும் போது இயந்திரத்தில் ‘பூஜ்ஜியம்’ காட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, 17சி படிவத்தில் (Form 17C) முன்கூட்டியே கையொப்பமிடக் கூடாது என்றும், வாக்குப்பதிவு முடிந்த பிறகே சரிபார்த்து கையெழுத்திட்டு அதன் நகலைப் பெற வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியமானது என்பதை வலியுறுத்திய ஸ்டாலின், பி.எல்.ஏ (BLA 2) மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தங்களது வாக்குகளைத் தொடக்கத்திலேயே பதிவு செய்துவிட்டு, பிறகு மற்ற வாக்காளர்களை அழைத்து வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். வரிசையில் நிற்கும் கடைசி வாக்காளர் வரை டோக்கன் வழங்கப்படுவதையும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாகச் சீல் வைக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என அவர் மடல் மூலம் அன்புக் கட்டளை விடுத்துள்ளார்.
தேர்தல் களத்தில் திமுகவினரின் உழைப்பை எவரும் விஞ்ச முடியாது என்பதை 2026 தேர்தலிலும் மெய்ப்பிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். “வாக்குச்சாவடியில் கழகத்தினர் கண்ணியமான முறையிலும், அதே சமயம் மிக விழிப்புடனும் செயல்பட வேண்டும். நமது உழைப்பிற்கு நிச்சயம் பலன் உண்டு. திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதி” என முதல்வர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார். இந்த மடல் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

