தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், வாக்காளர்களைக் கவரும் வகையிலும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும் உருக்கமான மற்றும் ஆக்ரோஷமான வீடியோ செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், திமுக ஆட்சியின் சாதனைகள், சமூக நீதி மற்றும் தமிழகத்தின் எதிர்காலம் குறித்த தனது தொலைநோக்குப் பார்வையை அவர் முன்வைத்துள்ளார். குறிப்பாக, “சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியே நமது முதல் குறிக்கோள்” என்று அவர் முழங்கியுள்ளார்.
தன்னை விமர்சிப்பவர்களுக்குப் பதிலளித்த முதல்வர், “கலைஞரை விட நான் அதிக ஆபத்தானவன் என்று சிலர் கூறுகிறார்கள். அது எனக்குக் கிடைத்த பெருமையாகவே கருதுகிறேன். ஏனெனில், தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கும், தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கத் துடிப்பவர்களுக்கும் நான் எப்போதும் ‘டேஞ்சர்’ தான்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். திமுக அரசு எப்போதும் தமிழக மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்திச் செயல்படும் என்பதை அவர் இந்த வீடியோ மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
மதச்சார்பின்மை குறித்துப் பேசிய அவர், திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்பதைத் தரவுகளுடன் விளக்கினார். “எங்கள் ஆட்சியில் ரூ.7,000 கோடிக்கும் அதிகமான திருக்கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தியுள்ளோம். அதே நேரத்தில், சிறுபான்மையினருக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுப்பதும், அவர்களுக்குத் துணை நிற்பதும் திமுக தான்” என்று அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கிய ஒரு சமத்துவ ஆட்சியைத் தாம் வழங்கி வருவதாக அவர் பெருமிதம் கொண்டார்.
எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக கூட்டணியைக் கடுமையாகச் சாடிய முதல்வர் ஸ்டாலின், “நமது உரிமை, கலாச்சாரம், மொழியை அழிக்க நினைக்கும் பாஜகவும், அவர்களுக்கு அடிமையாகச் செயல்படும் அதிமுகவும் தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை. எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும். தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக நாம் எழுப்பிய குரலே இன்று அந்த அநீதியைத் தடுத்து நிறுத்தியுள்ளது” என்றார்.
தமிழகத்தின் வளர்ச்சி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தடையின்றித் தொடர வேண்டும் என்றால், மக்கள் மீண்டும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு பல துறைகளில் சிறந்து விளங்குவதாகவும், மீதமுள்ள சிறு குறைகளும் விரைவில் சரிசெய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

