தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக இடையே ‘மகளிர் உரிமைத் தொகை’ விவகாரத்தில் கடும் வார்த்தைப்போர் வெடித்துள்ளது. குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் அண்மையில் 1.31 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்ட ₹5,000 சிறப்பு ஊக்கத்தொகை குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததற்கு முதலமைச்சர் Stalin தனது சமூக வலைதளப் பக்கத்தில் அனல் பறக்கும் பதிலடியைக் கொடுத்துள்ளார்.
“முதலில் ₹5,000 உரிமைத் தொகையை கொச்சைப்படுத்தினார்கள்; அது ‘பூமராங்’ ஆகி மக்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றதால், தற்போது அதற்கு உரிமை கொண்டாடுகிறார்கள்” என்று அவர் சாடியுள்ளார். மேலும், “திராவிட மாடல் அரசு சத்தமில்லாமல் நடத்திய இந்த Surgical Strike எதிர்க்கட்சிகளின் உறக்கத்தைக் கெடுத்துள்ளது” என முதல்வர் Stalin அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளை விமர்சித்த அவர், “காலங்காலமாக அ.தி.மு.க-விற்கு ‘Copy, Paste’ அரசியல் தான் வாடிக்கை என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் தெரியும். எங்களது திட்டங்களை அப்படியே பிரதிபலிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை” என்று எள்ளி நகையாடினார். முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு தோல்வி பயத்தினால் இத்தொகையை வழங்குவதாகக் குற்றம் சாட்டியிருந்தார். அதற்குப் பதில் அளிக்கும் விதமாகவே ஸ்டாலினின் இந்த “Surgical Strike” கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2026 தேர்தலை முன்னிட்டு, மகளிர் உரிமைத் தொகையை மாதம் ₹2,000 ஆக உயர்த்துவோம் என திமுக அறிவித்துள்ள நிலையில், தேர்தல் களத்தில் பெண்களின் வாக்குகள் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய ஆயுதமாக இந்தத் திட்டம் மாறியுள்ளது.

