நவராத்திரி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நவராத்திரி பண்டிகை களைகட்டி வரும் நிலையில், எதிர்பாராதவிதமாக நடந்த ஒரு சோக சம்பவம், ஒட்டுமொத்த மக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது இளம்பெண் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மனதை உலுக்குவதாக உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்திலுள்ள பலாசி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் சோனம், தன் கணவர் கிருஷ்ணபாலுடன் இணைந்து நவராத்திரி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பாரம்பரிய கார்பா நடனம் ஆடினார். அப்போது மகிழ்ச்சியுடன் நடனமாடிக் கொண்டிருந்த சோனம் திடீரென சரிந்து கீழே தரையில் விழுந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். மேலும், அவரது உயிர் மாரடைப்பால் பிரிந்திருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. இந்தச் சோகமான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாய்ப் பரவி வருகின்றன.
இளம் வயதினரிடையே அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்
நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி என தீவிர செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும்போதே, எதிர்பாராதவிதமாக திடீரெனக் கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது மக்களை கவலைகொள்ளச் செய்துள்ளது. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. நடுத்தர வயதினர் மட்டுமல்லாமல், குழந்தைகளும்கூட மாரடைப்புக்குப் பலியாகி வருகின்றனர்.
இந்தத் துயரச் சம்பவத்தைக் குறித்து மருத்துவர்கள் மற்றும் இதய நோய் நிபுணர்கள் முக்கியமான சில கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

நிபுணர்களின் எச்சரிக்கை: திடீர் இதய மரணம்
மருத்துவர்களின் கூற்றுப்படி, வயது வித்தியாசம் இன்றி யாருக்கும் மாரடைப்பு ஏற்படலாம். சில சமயங்களில், அறியப்படாத மற்றும் கண்டறியப்படாத இதய நோய்கள் உள்ளவர்களுக்கு, எந்த வகையான உடல் செயல்பாடும் இதயப் பிரச்னைகளைத் தூண்டும் அபாயம் உள்ளது.
திடீர் இதய மரணம் என்பது அனைத்து இதய செயல்பாடுகளின் விரைவான மற்றும் எதிர்பார்க்கப்படாத முடிவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மரபணு இதய நோய் போன்ற கண்டறியப்படாத இதய நோய்கள், டீனேஜர்கள் மற்றும் இளைஞர்களுக்கு திடீர் மரணத்திற்கு வழிவகுக்கலாம். அடையாளம் காணப்படாத இதய நோய், போட்டி விளையாட்டு போன்ற உடல் செயல்பாடுகளின்போது ஓர் இளைஞனை திடீரென இறக்கச் செய்யலாம். ஆனால், உடல் செயல்பாடு இல்லாமல் கூட திடீர் இதய மரணம் ஏற்படலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
மாரடைப்புக்கான முக்கிய காரணங்கள்
இளம் வயதினரிடையே மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களாக மருத்துவர்கள் சில முக்கிய விஷயங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
- ஆரோக்கியமற்ற உணவு முறைகள்
- உட்கார்ந்தே வேலைசெய்யும் பழக்கம் (Sedentary Lifestyle)
- அதிக மனஅழுத்தம்
- புகைபிடித்தல் மற்றும் அதிகரித்த போதைப்பொருள் பழக்கம்
- பரம்பரையாக ஏற்படும் அதிக கொழுப்பு
- கண்டறியப்படாத பிறவி இதய நோய்கள்
போன்ற வாழ்க்கை முறைப் பிரச்னைகளாலேயே மாரடைப்பு ஏற்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவற்றுடன், இளம் வயதிலேயே நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற நோய்கள் அதிகரிப்பதற்கும் மேற்கண்ட காரணங்களே முக்கியப் பங்கு வகிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
திடீர் மரணங்களைத் தவிர்க்க, இளைஞர்கள் தங்கள் உடல்நிலையை முழுமையாகப் பரிசோதித்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.