விஜய், வெங்கட்பிரபு இயக்கத்தில் G.O.A.T. படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 68 வது திரைப்படம். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் படத்தைத் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டவர்கள் உடன் நடிக்கிறார்கள். இதன் கடைசிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் மாஸ்கோ உள்பட சில இடங்களில் நடக்கயிருக்கிறது.
இந்தப் படம் அண்டர்புரொடக்ஷனில் இருக்கையில், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கி, முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். G.O.A.T. படத்துக்குப் பிறகு ஒரேயொரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்றும் கூறியிருந்தார். அதாவது, 69 வது படத்துடன் தனது நடிப்பு வாழ்க்கையை முடித்துக் கொள்ளவிருக்கிறார் விஜய்.
அவரது கடைசிப் படத்தை இயக்குகிறவர் யார் என்ற கேள்வி பல வாரங்களாக கேட்கப்பட்டு வருகிறது. வெற்றிமாறன் உள்பட பல இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டன. தற்போதைய செய்தி, அட்லி விஜய்யின் கடைசிப் படத்தை இயக்குகிறார். இதில் சமந்தா நாயகியாக நடிக்க, சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிப்பதாகவும், அனிருத் இசையமைப்பார் எனவும் கூறப்படுகிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் மூன்றும் விஜய்யின் வியாபார எல்லையை விஸ்தரித்தன. அனைத்துத் தரப்பினரையும் கவரக்கூடிய பிரமாண்ட கமர்ஷியல் படம் எடுப்பது தனித்திறமை. அட்லி அதில் வல்லவர். விஜய் தனது கடைசிப் படத்தை இயக்க, அட்லியை தேர்வு செய்திருந்தால், அது சிறப்பான முடிவாக இருக்கும்.
சம்பந்தப்பட்டவர்கள் இந்தத் தகவலை இன்னும் உறுதி செய்யாததால், விஜய்யின் கடைசிப் படத்தின் இயக்குநர் யார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.