கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் வரும் திங்கள் கிழமை பிப்ரவரி 19ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இன்று ஆளுநர் உரையை வாசித்த சபாநாயகர் அப்பாவு தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

mk2

அதில் தமிழக அரசின் முதன்மை திட்டம் என கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை குறிப்பிட்டார். இந்நிலையில் 19ஆம் தேதி தாக்கல் செய்யும் தமிழக அரசின் பட்ஜெட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குவது தொடர்பாகவும், பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது. செப்டம்பர் முதல் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறி 7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதாவது தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பயனாளர்கள் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதிக்குள் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வந்தனர். தற்போது சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயனாளர்களாக உள்ளனர்.

mk

2023 ஜனவரி முதல் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படாமல் உள்ளது. புதிதாக விண்ணப்பித்த சில லட்சம் பேருக்கும் இன்னும் அட்டைகள் விநியோகிக்கப்படாமல் உள்ளன. ரேஷன் அட்டைகள் கிடைக்கப்பெற்ற உடன் பலர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க தயாராக உள்ளனர்.எனவே தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்த ஆண்டு இணைக்கப்பட உள்ள பயனாளர்களையும் கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கப்படும். அதைத் தொடர்ந்து புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைக்க வழிமுறைகள் அறிவிக்கப்படும் என்கிறார்கள்.

அதேபோல் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த திட்டத்தை தமிழக அரசு பெரிதும் நம்பியுள்ளது. எனவே அதிருப்தி உருவாகிவிடக்கூடாது என்பதால் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here